சென்னை: தமிழகம் முழுவதும் 754 கோயில்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அன்னதானத்துக்கான செலவினத்தொகையை உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்கு ஆணையர் குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கோயில்களிலும் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு ரூ.25 வீதம் என வரையறுக்கப்பட்டு, ஒரேமாதிரியான திட்ட அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போதைய விலைவாசி அடிப்படையில் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு ரூ.35 வீதம் என உயர்த்தி, வரையறுக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு நாளுக்கு 100 பேருக்கு ரூ.3,500 என செலவினம் அனுமதிக்கப்படும்.
மஞ்சள்தூள் 350 கிராம் ரூ.50, புழுங்கல் அரிசி (பொன்னி) 16கிலோ ரூ.832, துவரம் பருப்பு 2கிலோ ரூ.220, சிலிண்டர் ரூ.200,தக்காளி 2 கிலோ ரூ.50, வெங்காயம் 2 கிலோ ரூ.60, தயிர் 5 லிட்டர்ரூ.200, சமையல் கூலி ரூ.450 உள்ளிட்ட செலவினத்தை நிர்ணயித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.