டெல்லி : சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் புல்லட் ரயில் குறித்த கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் மொத்தம் 7 புல்லட் ரயில் வழித்தடங்களை அமைப்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 7 வழித்தடங்களில் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரையிலான பாதை ஒன்று, டெல்லி – வாரணாசி, டெல்லி – அமிர்தசரஸ், டெல்லி – அகமதாபாத், வாரணாசி – ஹவுரா, மும்பை – நாக்பூர், மும்பை – ஹைதராபாத், ஆகிய வழித்தடங்களிலும் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். எந்த வழித்தடத்திற்கும் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். நாட்டின் முதல்முறையாக முபை – அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் பாதை பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் ரயில்வே துறை கூறியுள்ளது.