தஞ்சாவூர்:
தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. 22-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
தொடர்ந்து அடுத்த மாதம் 4-ந் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2 மேயர், 2 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதாவது தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் 2 மாநகராட்சி கிடையாது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தான் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இதில் நகராட்சியாக இருந்த கும்பகோணம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதன் மூலம் 2 மேயர், துணை மேயர் என்ற சிறப்பு அந்தஸ்தை தஞ்சை மாவட்டம் பெறப்போகிறது. இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தஞ்சைக்கு இந்த முறை தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
கடந்த முறை மேயராக இருந்த அ.தி.மு.கவை சேர்ந்த சாவித்திரிகோபால் நகராட்சி தலைவியாக இருந்து மேயராக பொறுப்பு ஏற்றவர். இதேபோல் துணை மேயராக மணிகண்டனும் இதே முறையில்தான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 மாநகராட்சிகளுக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தான் முதல் தேர்தல். இப்படிப் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளைக் கைப்பற்ற தி.மு.க, அ.தி.மு.க இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இரண்டு மாநகராட்சிகளிலும் சேர்த்து மொத்தமுள்ள 99 வார்டுகளிலும் தி.மு.க, அ.தி.மு.க கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். வாக்காளர்களை கவரும் வகையில் விதவிதமான முறையில் பிரசார யுக்தியை கையாண்டு வருகின்றனர். இதற்காக மாநகராட்சி வார்டில் தங்களது கட்சி வேட்பாளர்களை அதிகளவில் நிறுத்தியுள்ளனர்.
தஞ்சை மாநகராட்சி 51 வார்டுகளில் தி.மு.க. 41 இடங்களிலும், அ.தி.மு.க. 50 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில் 39 வார்டுகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 39 இடங்களில் தி.மு.க.வும், 46 இடங்களில் அ.தி.மு.க.வும் போட்டியிடுகிறது. 41 வார்டுகளில் இரண்டு கட்சியினரும் நேரடியாக மோதுகின்றன.
இப்படி அதிக அளவில் இரண்டு கட்சியினர் போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போட்டி போட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாநகராட்சியில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் மற்றும் புதிதாக உதயமான கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை தி.மு.க தான் அலங்கரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிர களப்பணியாற்றி வெற்றிக் கனியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று முனைப்புடன் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த முறை நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி தலைவர் பதவியை அலங்கரித்தது போல் நடைபெறவுள்ள தேர்தலில் பொதுமக்களின் பெருவாரியான ஆதரவை பெற்று இம்முறை மேயர் பதவியையும் கைப்பற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.வினரும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் தனித்து களம் காணும் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சியினரும் மேயர் பதவிகளை குறிவைத்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அனைத்து வார்டுகளிலும் குழு குழுவாக சென்று பொதுமக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இப்படி பலமுனை போட்டிகளால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் தஞ்சை மாவட்டத்தில் தான் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஒரே மாவட்டத்தில் 2 மேயர் பதவிக்கான மகுடத்தை ஒரே கட்சியினர் சூடுவார்களா? அல்லது வேறுவேறு கட்சியினர் மகுடம் சூடுவர்களா? என்பதற்கு இன்னும் சில நாட்களில் விடை கிடைத்துவிடும்.
வரலாற்று சிறப்புமிக்க அந்த நாளை தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.