உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், சட்டசபைத் தேர்தல் வரும் 14-ல் ஒரே கட்டமாக நடக்கிறது. ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கூறிவருகின்றனர். இந்தியா என்பது ஒரே நாடு, அதனால் அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவை. சமத்துவத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்ற பிறகு உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அதற்கான குழுவும் அமைக்கப்படும். மாநிலத்தில் உள்ள அனைவரும் சம உரிமை பெற இது வழிவகுக்கும். இந்த சட்டம் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும். பாலின ரீதியான நீதியை நிலைநிறுத்தும்.
பெண்களுக்குச் சமமான அதிகாரம் அளிக்கும். திருமணங்கள், விவாகரத்து, நிலம்-சொத்து ஆகிய விவகாரங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டங்களைப் பெற வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.
Also Read: `மதத்தின் பெயரில் நாட்டை உடைக்க முயற்சி… பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்’ – மத்திய அமைச்சர்