மதுரை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் மத நிறுவனங்களுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கும்போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுவதை தடுக்கவும், அதனை ஈடுகட்டவும் முன்கூட்டியே அதற்கான தொகையை டெபாசிட் செய்ய நிபந்தனை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சிவகங்கை ஸ்ரீ சொர்ணகாளீஸ்வரர் கோயில் கோபுரம் வழியாக புனித அருளானந்தர் ஆலய தேரை கொண்டுச்செல்ல அனுமதிக்க கூடாது எனக் கேட்டு, ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் மத நிறுவனங்கள் எப்போதெல்லாம் பேரணி நடத்த அனுமதி கேட்கிறதோ, அப்போது சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் பேரணியில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அதை ஈடுகட்டும் வகையில் முன்கூட்டியே குறிப்பிட்ட அளவு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்க வேண்டும் என அரசுக்கும், டிஜிபிக்கும் நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.