Tamil Nadu Urban Local Body Elections 2022: மதுரை மாநகராட்சியின் மேயராக இஸ்லாமிய பெண்ணே பொறுப்பேற்பார் என்று கூறி தமிழக பாஜக மூன்று இஸ்லாமிய வேட்பாளர்களை மதுரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்கியுள்ளது. இந்த மூன்று வேட்பாளர்களில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 36 வயது மதிக்கத்தக்க மெஹருனிஷா, 25 வயது மதிக்கத்தக்க கஷிஃபா சையத் மற்றும் 50 வயது மதிக்கத்தக்க பஷீர் அகமது ஆகியோர் மதுரையில் போட்டியிடுகின்றனர்.
இஸ்லாமியர்களுக்கு எதிரானா கட்சியாக பாஜக இருக்கிறது என்ற போக்கை மாற்றும் வகையிலும், மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
2018ம் ஆண்டு பாஜகவில் இணைந்த கஷிஃபா சையத் ப்ளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜியில் டிப்ளோமா கல்வி பெற்றுள்ளார். வார்ட் எண் 22-ல் போட்டியிடும் அவர், பிரதமர் நரேந்திர மோடியின், மேம்பாடு குறித்த தொலைதூரப் பார்வையால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்தாக கூறுகிறார். பாஜக குறித்த தவறான எண்ணங்கள் தற்போது நிலவி வருகிறது. ஆனால் கட்சியில் சேர்ந்த நாள் முதல் எந்த விதமான எதிர்ப்பையும் நான் எதிர்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
கொரோனாவா.. அப்டினா என்ன…? பிரசாரத்தின்போது காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!
நான் தன்னார்வலராக பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து என்னுடைய பணிகளுக்கு வரவேற்பு தான் கிடைத்துள்ளது என்று கூறிய அவர், கழிவுநீர் சாக்கடைகள் பராமரிப்பு மற்றும் குடிநீர் விநியோகம் போன்றவற்றுடன், மதுபானக்கடைகளும் இங்கே முக்கிய பிரச்சனையாக உள்ளது. ஏராளமான ஆண்கள் குடிக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக தன்னார்வலராக பணியாற்றி வந்த மெஹருனிஷா 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பிரதமரின் பார்வை என்ன என்பதை இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நாங்கள் உணர துவங்கியுள்ளோம் என்று கூறும் அவர், பிரதமர் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்புகள் வழங்குவதையும் மேற்கோள்காட்டினார். அடிமட்டத்தில் கடின உழைப்பின் மூலம் மாற்றங்களை உண்டாக்குவதன் மூலம் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கூறும் அவர் 54வது வார்டில் போட்டியிடுகிறார். அங்கே அவருக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
36வது வார்டில் போட்டியிடுகிறார் பஷீர் முகமது. இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை பாஜக கொண்டுள்ளது என்ற விமர்சனங்களுக்கு மத்தியிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பே பாஜகவில் சேர்ந்து பணியாற்றி வருவதாக கூறுகிறார் பஷீர் அகமது. கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஹிஜாப் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து நான் பிரச்சாரத்தில் குறிப்பிட்டது எங்கள் சமூகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தினாலும், என்னால் அவர்களுக்கு புரிய வைக்க முடியும் என்று கூறினார். மேலும் பாஜக தான் முத்தலாக்கை ஒழித்தது. 370வது பிரிவை நீக்கியது. இதன் மூலம் இஸ்லாமியர்கள் பலன் அடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.