சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக பிப்.19-ம்தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்புஅளிக்க வேண்டும் என்று தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதிநடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும்படி தொழிலாளர் நல ஆணையர், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர் ஆகியோருக்கு தொழிலாளர் துறை செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் கடிதம் எழுதியுள் ளார்.
அக்கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் பிப்.19-ம்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்று, வர்த்தக நிறுவனங்கள், தொழில், தொழிற்சாலைகளில்பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். ஒருவேளை, வேலை அளிப்பவர் இதை மீறினால் சட்டப்படி குற்றமாகும். இதன்மூலம் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, கடைகள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை, வாக்குப்பதிவு நடைபெறும் பிப்.19-ம் தேதி அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.