புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 50,407 என்றளவில் உள்ளது. இது நேற்றைவிட 13% குறைவாகும். அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 3.48% என்றளவில் சரிந்துள்ளது.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன. அரசாங்கமும் நாட்டில் மூன்றாவது கரோனா அலை ஏற்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே அன்றாட கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் எல்லா மாநிலங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அமலாகிவிட்டன.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50,407 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 3.48% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 5.07%. நோயில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.37% ஆக உள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50,407 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,25,86,544.
* கடந்த 24 மணி நேரத்தில் 1,36,962 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,14,68,120.
* கடந்த 24 மணி நேரத்தில் 804 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,07,981.
* இதுவரை நாடு முழுவதும் 1,72,29,47,688 கோடி (172 கோடி ) பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.