சகாரன்பூர்: ‘‘மோடியை முஸ்லிம் பெண்கள் பாராட்டி வருவதால், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது’’ என்று பிரதமர் மோடி பேசினார்.
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உ.பி.யின் ஜாட் இன மக்கள் செல்வாக்கு அதிகமுள்ள மேற்கு பகுதியில் 11 மாவட்டங்களை சேர்ந்த 58 தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சகாரன்பூரில் நேற்று பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் முறையாக பிரதமர் மோடி பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
உத்தர பிரதேசத்துக்கு பாஜக அரசு அவசியம் தேவை. உ.பி.யில் மட்டும் குடும்ப அரசியல் செய்பவர்கள் அதிகாரத்தில் இருந் திருந்தால், கரோனா தடுப்பூசியை தெருவுக்கு தெரு விலைக்கு விற்று காசு பார்த்திருப்பார்கள். மக்களின் உயிரோடு விளையாடி இருப்பார்கள்.
உ.பி.யை வன்முறை இல்லாத, பயமில்லாத ஒரு மாநிலமாக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்பவர்களுக்கு வாக்களிக்க மக்கள் முடிவெடுத்துவிட்டனர்.
முசாபர்நகர், சகாரன்பூர் நகரங்களில் எதிர்க்கட்சியினர் (சமாஜ்வாதி) வன்முறைகளை தூண்டிவிட்டனர். இதுபோன்ற வன்முறைக்கு ஆதரவாக இருப்பவர்கள், மறுமலர்ச்சியை கொண்டுவருவார்கள் என்று நினைக்காதீர்கள். அவர்கள் சந்தர்ப் பத்துக்காக காத்திருக்கிறார்கள்.
மாநிலத்தில் இதற்கு முன்பு குடும்ப ஆட்சி நடத்தியவர்களுக்கு தங்கள் குடும்பத்தை மீறி எதையும் சிந்திக்க முடியவில்லை.
அடுத்தடுத்து குடும்ப அரசியல் நடத்துபவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை பார்க்கிறேன். கடந்த காலங்களில் செய்ததவறுகளை மக்கள் மறக்காமல் உள்ளனர் என்பதை முந்தைய ஆட்சியாளர்கள் அறிவார்கள். இனிமேல் ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும். அதனால், அவர்கள் எத்தனையோ பொய்களை கூறுகின்றனர்.
முஸ்லிம் பெண்களின் மேம்பாட்டுக்கு ‘முத்தலாக் தடை சட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. தலாக்என்ற பிடியில் இருந்து முஸ்லிம்சகோதரிகளை பாஜக அரசு விடுவித்திருக்கிறது. அதனால் அவர்கள் பாஜக.வை பகிரங்கமாக ஆதரிக்க தொடங்கினர். இதை வாக்கு வேட்டையில் ஈடுபடுபவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால், முஸ்லிம்கள் பெண்கள்வளர்ச்சியை அவர்கள் தடுக்கிறார்கள். எங்கள் அரசு முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்கள் மோடியை, பாஜக.வைபாராட்டுகிறார்கள், ஆதரிக்கிறார்கள். அதனால் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வயிற்று வலி வந்துள்ளது.
முஸ்லிம் பெண்களுக்கு எதிரானகுற்றங்களை தடுப்பதில் முதல்வர் ஆதித்யநாத் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இதுபோன்ற மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி தொடர வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். உ.பி.யில் 2-வது கட்ட தேர்தல் 14-ம் தேதிநடைபெறுகிறது. -பிடிஐ
முதல்வர் ஆதித்யநாத் வேண்டுகோள் உ.பி.யில் நேற்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், முதல்வர் ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘வன்முறை இல்லாத, பயமில்லாத, குற்றங்கள் இல்லாத உ.பி.யை உருவாக்க பாஜக உறுதி பூண்டுள்ளது. உங்கள் ஒரு வாக்கு, உ.பி.யை வலிமையானதாக மாற்றும். தேர்தல் திருவிழா என்பது உங்கள் பங்களிப்பு இல்லாமல் நிறைவு பெறாது. எனவே, எந்த வேலை இருந்தாலும், முதலில் வாக்களித்து விடுங்கள்’’ என்று கூறியுள்ளார். |