உக்ரைன் மீது எதிர்வரும் செவ்வாய் கிழமை ரஷ்ய படையெடுப்பு முன்னெடுக்கலாம் என்று ப்ளூம்பெர்க் ஊடகம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த ஊடகமானது இதற்கு முன்னரும் ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் நாள் குறித்து, பின்னர் தவறுக்கு மன்னிப்பு கோரியிருந்தது.
வெள்ளிகிழமை மதியத்திற்கு மேல் செய்தி வெளியிட்ட ப்ளூம்பெர்க், செவ்வாய்கிழமைக்கு முன்னர் ரஷ்யா கண்டிப்பாக உக்ரைன் தொடர்பில் முடிவெடுக்கும் எனவும், அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய தரப்பில் இருந்து இதுவரை படையெடுப்பு தொடர்பில் உறுதியான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆனால் அமெரிக்க அதிகாரிகளே, ரஷ்யா தயார் நிலையில் இருப்பதாகவும், மக்கள் வெளியேற வேண்டும் எனவும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
மட்டுமின்றி, உக்ரைனுக்கு ஆதரவாக 3000 துருப்புகளை கூடுதலாக போலந்து நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா.
ஏற்கனவே 4,500 துருப்புகள் போலந்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, அமெரிக்க மக்கள் அடுத்த 48 மணி நேரத்தில் உக்ரைன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் தங்கள் குடிமக்களை உக்ரைனை விட்டு வெளியேற வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, அமெரிக்க ஊடகங்களே ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் அதிக அக்கறை காட்டுவதாக உக்ரைன் இராணுவ அதிகாரிகள் தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.