Tamilnadu Ration shop recruitment for 3803 vacancies announcement soon: தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும், அந்த பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அதேபோல, தமிழக சட்டப்பேரவையில், கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் 23,502 முழுநேர நியாயவிலை கடைகளும், 9639 பகுதிநேர நியாயவிலை கடைகள் என மொத்தம் 33,141 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாயவிலை கடைகளில் 31.12.2021 தேதியில் 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தனியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்போது 3,836 விற்பனையாளர்கள் தலா ஒரு நியாயவிலை கடையினை கூடுதலாக நிர்வகித்து வருகின்றனர். 1,128 விற்பனையாளர்கள் தலா 2 நியாயவிலை கடைகளையும், 222 விற்பனையாளர்கள் 3 கடைகளையும், 15 விற்பனையாளர்கள் தலா 5 நியாயவிலை கடைகள் மற்றும் அதற்கு கூடுதலாக கடைகளை நிர்வகித்து வருகின்றனர். ஒரு தாய்க்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிநேர கடைகளை கவனித்து கொள்வது கூடுதல் பொறுப்பின் கீழ் வராது.
ஆயினும், ஒரே பணியாளர் இரண்டுக்கு மேற்பட்ட முழுநேர நியாயவிலை கடைகளை பொறுப்பேற்று செயல்படுத்தி வருவது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோக திட்ட பணிகளை திறமையாக செயல்படுத்துவதற்கு இடையூறாக அமையும். எனவே முழுநேர நியாய விலை கடையின் விற்பனையாளர் கூடுதலாக ஒரே ஒரு முழுநேர நியாயவிலை கடையின் பொறுப்பினை மட்டும் வகித்து வருவதை இணைபதிவாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரேசன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தெரிகிறது. எனவே வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில், புதுப்பித்தல் செய்யாமல் உள்ளவர்கள் விரைவில், உங்கள் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்து வைத்துக் கொள்ளுங்கள்.