வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்யாமலேயே வேலூர் மாநகராட்சியிலிருக்கும் இரண்டு வார்டுகளில் போட்டியின்றி வெற்றிபெற்றிருக்கிறார்கள் தி.மு.க வேட்பாளர்கள். 7-வது வார்டில், தி.மு.க வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜாவை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற போட்டி வேட்பாளர்களும் வாபஸ் பெற்றுக்கொண்டதால், தி.மு.க வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜா போட்டியின்றி வெற்றிபெற்றார். அதேபோல, 8-வது வார்டிலும் எதிரணி வேட்பாளர்களின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால், தி.மு.க வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார். இந்த 2 வார்டுகளைத் தவிர்த்து, மாநகராட்சியிலுள்ள 58 வார்டுகளுக்கு மட்டுமே வாக்கு பதிவு நடக்கவிருக்கிறது.
தி.மு.கவில் வெற்றி பெற்ற வேட்பாளர் சுனில்குமார் கடந்த முறையும் கவுன்சிலராக இருந்தவர். அப்போது, மாநகராட்சியின் முதலாவது மண்டலக் குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். இந்த முறையும் முதலாவது மண்டலக் குழுத் தலைவர் பதவியைக் குறிவைத்து, அவர் காய்நகர்த்துகிறார்.
இந்த நிலையில், வேட்பு மனு படிவத்துடன் சுனில்குமார் தாக்கல் செய்த சொத்து விவரத்தை அலசினோம். கிட்டத்தட்ட 2.14 கோடி ரூபாய் சொத்துகள் தனது பெயரில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். அசையும் சொத்துகள் தன் பெயரிலும், மனைவி சரஸ்வதி பெயரிலும் சேர்த்து 1,40,47,117 ரூபாய் இருப்பதாகக் கணக்கு காட்டியுள்ளார் சுனில்குமார். அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் மட்டும் 1,16,14,000 ரூபாய் மதிப்பில் நிலையாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். தன் மனைவி பெயரில் அசையா சொத்துகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன் தொகை 1,11,77,091 ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி பெயரில் கடன்கள் எதுவுமில்லை. டூ வீலர் ஒன்று, ரூ.6 லட்சம் மதிப்பிலான கார், ரூ.20 லட்சம் மதிப்புள்ள லக்ஸரி கார் என மூன்று வாகனங்களை அவர் பயன்படுத்துகிறார். 215 பவுன் தங்க நகைகளும் அவரிடம் இருக்கின்றன. தங்கத்தின் மதிப்பு 50,68,000 ரூபாய். காப்பீட்டுத் திட்டங்களில் 10,66,320 ரூபாயை முதலீடு செய்திருக்கிறார் சுனில்குமார். அதேபோல, தனிப்பட்ட முறையில் 48,12,000 ரூபாயை வெளியில் கடனாகவும் கொடுத்திருக்கிறார்.
கரசமங்கலம் கிராமத்திலிருக்கும் விளை நிலத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 வருமானம் கிடைக்கிறது. செங்குட்டை வணிக வளாககக் கட்டடம் மூலமாக வருடத்துக்கு ரூ.1,08,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். பரம்பரைச் சொத்தான பழைய வீட்டை வாடகைக்கு விட்டதில், வருடத்துக்கு ரூ.36,000 கிடைக்கிறது. தனது புதிய வீட்டின் முதல் தளத்தை வாடகைக்கு விட்டதிலும் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் வருவாய் ஈட்டுகிறார் சுனில்குமார்.
சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையிலும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொகுசு பங்களா இருக்கிறது. அந்தப் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் 7,175 சதுரடி பரப்பளவுக்கொண்ட நிலத்தை வாங்கியிருக்கிறார் சுனில்குமார். 2015-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி ஏலகிரி நிலத்தை தனது பெயரில் பத்திரப்பதிவும் செய்திருக்கிறார் அவர். பொருளாதாரத்தில் அபார வளர்ச்சிகண்டிருக்கும் சுனில்குமார், 9-ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார். அவருக்கு வயது 46. சுனில்குமார்மீது விருதம்பட்டு காவல் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக, நீதிமன்றத்தில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த விவரங்களெல்லாம் சுனில்குமார் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டவை.
அதேபோல, மற்றொரு வெற்றி பெற்ற வேட்பாளர் புஷ்பலதாவின் கணவர் வன்னியராஜா தி.மு.க-வில் காட்பாடி வடக்குப் பகுதி பொறுப்பாளராக உள்ளார். இவர், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான புள்ளிகளில் முக்கியமான ஒருவர். வேலூர் மேயர் பதவி, பெண்கள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், தனது மனைவியை மேயராக்குவதற்காக வன்னியராஜா முயற்சிக்கிறார். இவர்களுக்கு ஷரிஷ்ப்ரியா என்ற ஒரு மகளும், மௌலீஸ்வரன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். மாநகராட்சியாக வேலூர் தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு தாராபடவேடு பகுதி, நகராட்சியாக இருந்தது. அதன் நகரமன்றத் தலைவராகவும் புஷ்பலதா பதவி வகித்துள்ளார். இந்த முறை மேயர் ரேஸில் முந்துகிறார். அவரின் சொத்து விவரத்தையும் வேட்புமனுவில் அலசினோம்.
புஷ்பலதா கடந்த நிதியாண்டில் வருமானவரி ஏதும் செலுத்தவில்லை. அவர் கணவர் வன்னியராஜா 4,93,470 ரூபாயை வருமான கணக்கில் காட்டியிருக்கிறார். அசையும் சொத்துகள் தன் பெயரிலும், கணவர் பெயரிலும் சேர்த்து 81,98,364 ரூபாய் இருப்பதாகவும் கணக்கு காட்டியுள்ளார். அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் இல்லை. தன் கணவர் வன்னியராஜா பெயரில் மட்டும் ரூ.25 லட்சம் மதிப்பில் நிலையாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். அதிலும், அசையா சொத்துகள் தன் கணவரின் சுய சம்பாதியத்தில் வாங்கப்பட்டவை. பரம்பரைச் சொத்துகள் எதுவும் கிடையாது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன் தொகை 27 லட்சம் ரூபாய் என்றும் குறிப்பிட்டியிருக்கிறார் புஷ்பலதா.
துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்துக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனும் தன் மனைவியை மேயராக்க காய் நகர்த்துகிறார். மாநகராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும் விமலாவின் சொத்து விவரப் பட்டியலையும் புரட்டிப் பார்த்தோம். நடப்பு நிதியாண்டில் 4,87,820 ரூபாயை தனது வருமானமாக காட்டியிருக்கிறார் விமலா. அவரது கணவர் பூஞ்சோலை சீனிவாசன் கடந்த நிதியாண்டில் 11,48,51,800 ரூபாயை கணவரின் வருமானமாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read: அதிமுக கோவை மேயர் ரேஸ்… `புறப்பட்ட புதிய புயல்’ – அப்செட்டில் எஸ்.பி வேலுமணி நிழல்?!
அசையும் சொத்துகள் தன் பெயரிலும், கணவர் பெயரிலும் சேர்த்து 51,38,000 ரூபாய் மதிப்புக்கு இருப்பதாகவும் கணக்கு காட்டியிருக்கிறார் விமலா. அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் இல்லை. கணவர் சீனிவாசன் பெயரில் மட்டும் 50,53,400 ரூபாய் மதிப்பில் நிலையாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். தன் பெயரிலும், தனது கணவர் பெயரிலும் ஒரு ரூபாய்க்கூட கடன் இல்லை என்று விமலா குறிப்பிட்டிருக்கிறார்.
31-வது வார்டில் களமிறங்கியுள்ள தி.மு.க பெண் வேட்பாளர் சுஜாதா ஆனந்தகுமாரும் மேயர் ரேஸில் இருக்கிறார். அவரின் சொத்துப் பட்டியலையும் அலசினோம். அசையும் சொத்துகள் தன் பெயரிலும், கணவர் பெயரிலும் சேர்த்து 49,37,680 ரூபாய் இருப்பதாகக் கணக்கு காட்டியுள்ளார். அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரிலும், கணவர் பெயரிலும் சேர்த்து ரூ.90 லட்சம் மதிப்பில் நிலையாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
22-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க-வின் மூத்த நிர்வாகியான ஆர்.பி.ஏழுமலை தனக்கு 53,20,000 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அ.தி.மு.க-விலும் பணபலமிக்க வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 45-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க-வின் இளம் வேட்பாளர் அஸ்மிதா தாக்கல் செய்த சொத்து விவரப் பட்டியலை புரட்டிப் பார்த்தோம். அசையும் சொத்துகள் தன் பெயரிலும், கணவர் பெயரிலும் சேர்த்து 29,38,981 ரூபாய் இருப்பதாகக் கணக்கு காட்டியுள்ளார். அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரிலும், கணவர் பெயரிலும் இல்லை எனக் கூறியிருக்கிறார். அ.தி.மு.க சார்பில் 38-வது வார்டில் போட்டியிடும் மூத்த நிர்வாகி உமா விஜயகுமார் தன் பெயரிலும், கணவர் பெயரிலும் சேர்த்து 1,22,35,000 ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாகக் கணக்கு காட்டியிருக்கிறார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், வேலூர் மத்திய மாவட்டத் தலைவராக இருந்த பி.எஸ்.பழனி, சட்டமன்றத் தேர்தல் முடிந்தப் பின்பு அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். அ.தி.மு.க-வில் தீவிரமாக களப்பணியாற்றிவரும் பி.எஸ்.பழனியை 52-வது வார்டில் களமிறக்கியிருக்கிறது அக்கட்சி. அசையும், அசையா சொத்துகள் தன் பெயரிலும், தன் மனைவி ஜெயஸ்ரீ பெயரிலும் சேர்த்து 1,64,23,672 ரூபாய் மதிப்புக்கு இருப்பதாக தனது வேட்புமனுவின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பி.எஸ்.பழனி.