டேராடூன்: பிரதமர் மோடியின் நண்பர்களான இரண்டு தொழிலதிபர்களுக்காகவே ஒட்டுமொத்த நாட்டின் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முன்னணி ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக, காங்கிரஸ் சமபலத்துடன் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் காதிமா நகரில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதற்கு பாஜகவினர் காங்கிரஸை குற்றம்சாட்டுகின்றனர். கரோனா கொடுமையின்போது புலம் பெயர்ந்த மக்கள் சாலைகளில் நடந்து கொண்டிருந்தார்கள், அவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டுமா? நாங்கள் அரசியல் செய்கிறோமா? நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்.
காவி முகாமில் (பாஜக) அனைத்து தலைவர்களும் முதல்வர் முதல் பிரதமர் வரை தங்கள் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்கிறார்கள். யாரும் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.
பிரதமரும், பாஜகவினரும் தனது கட்சியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மட்டுமே கடமையை செய்கிறார். மக்களை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.
வேலை வாய்ப்புகள் இல்லாததால் உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிக மக்கள் புலம்பெயர்ந்து செல்லும் அவலம் உள்ளது. இந்த மாநிலத்தில் இமயமலை, இயற்கை, சுற்றுலா வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன. ஆனால் வேலைவாய்ப்பு இல்லை. மக்கள் வேலைக்காக இங்கிருந்து இடம்பெயர்கின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கம், சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. பிரதமரின் நண்பர்களான இரண்டு தொழிலதிபர்களுக்காகவே ஒட்டுமொத்த நாட்டின் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.