தமிழகத்தில் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பிளஸ் 2 திருப்புதல் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் தவறாமல் பள்ளிகளுக்கு வர வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
12 மாவட்டங்களில் இன்று கனமழை
தமிழகத்தில் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக 12-ம் தேதி தென்தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்கள்மற்றும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
13, 14, 15-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்டவானிலையே நிலவும்.
11-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 8செமீ, வேதாரண்யத்தில் 7 செமீ,திருப்பூண்டியில் 5 செமீ, வேளாங்கண்ணியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.