பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுடன் ஆம் ஆத்மி முதன்முறையாக போட்டியிடுகிறது. இதனால் வெற்றிப்பெரும் முனைப்புடன் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி மற்றும் மகள் பிரச்சாரம் செய்தனர். கெஜ்ரிவாலும் பஞ்சாபிற்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி மீது சட்டவிரோத சுரங்க வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். விசாரணைக்கு உத்தரவிடும்படியும் ஆளுநரிடம் முறையிட்டார். இதற்கு சரண்ஜித் சன்னி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரண்ஜித் சன்னி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து சரண்ஜித் சன்னி கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்க்காரர். என் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்த முயன்றார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை. அவர்கள் எனக்கு எதிராக ஆளுநரிடமும் புகார் அளித்தனர். இறுதியில் உண்மையே ஜெயித்தது.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள். அதேபோல், கெஜ்ரிவாலும் அவரது டெல்லி குடும்பத்தாருமான ராகவ் சதா உள்பட பலரும் பஞ்சாப்பைக் கொள்ளையடிக்க வந்துள்ளனர். ஆனால், முகலாயர்கள், ஆங்கிலேயர்களுக்கு செய்தது போல் பஞ்சாப் அவர்களுக்கும் தங்கள் இடத்தைக் காட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது