திருப்பதி: ஆந்திராவில் 2 லட்சம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை தீயிட்டு எரித்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட, 2 லட்சம் கிலோ கஞ்சாவை போலீசார் தீயிட்டு எரித்தனர்.
இது குறித்து, போலீஸ் டி.ஜி.பி., கெளதம் சவாங் கூறியதாவது: ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் உள்ள குக்கிராமங்களில் பல ஆண்டுகளாக கஞ்சா பயிரிட்டு அவற்றை நாடு முழுதும் கடத்துகின்றனர். இதற்கு மாவோயிஸ்டுகள் உதவி செய்து அதன் வாயிலாக பணம் சம்பாதிக்கின்றனர். ஒடிசாவின், 23 மாவட்டங்களிலும், விசாகப்பட்டினம் மலை கிராமங்களில் உள்ள, 11 மண்டலங்களிலும் கஞ்சா பயிரிடப்பட்டு வருகிறது.
இதையடுத்து ‘ஆப்ரேஷன் பரிவர்த்தனா’ திட்டத்தின் வாயிலாக, 11 மண்டலங்களில் உள்ள, 313 கிராமங்களில், 7,552 ஏக்கரில் பயிரிடப்பட்ட கஞ்சாவை போலீசார் அழித்துள்ளனர். அடுத்து, நான்கு மாவட்டங்களில், வாகன சோதனை நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சம் கிலோ கஞ்சா எரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement