”இலங்கை தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளை தீர்க்குமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது,” என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கை தமிழர் நலனுக்கு இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அங்கு தமிழர் உட்பட அனைத்து சமூக மக்களுக்கும் அமைதி, சமத்துவம், நீதி, கண்ணியமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என, பல கட்டங்களில் இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
இதை, ஐ.நா.,மனித உரிமை ஆணையத்தின், 46வது மாநாட்டிலும் இந்தியா எடுத்துரைத்துள்ளது.
‘நியாயமான அதிகாரப் பகிர்வு உட்பட, இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தால் ஒருங்கிணைந்த இலங்கை உருவாகும்’ என, அந்நாட்டு அரசிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழ் சமூகத்தின் நியாயமான குரலுக்கு மதிப்பளிப்பது, ஒட்டுமொத்த இலங்கையின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என இந்தியா நம்புகிறது.
பல முறை நடந்த இரு தரப்பு பேச்சிலும் இந்த கருத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏராளமான அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.