பிரசாந்த் கிஷோர் தலைமையில் செயல்படும் I-PAC நிறுவனத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்படுத்திய 5 ஆண்டு கால ஒப்பந்தத்தை மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவன ஆலோசனையை பெற்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்கவைத்தது திரிணாமுல் காங்கிரஸ். இந்த வெற்றியால் பல்வேறு மாநிலங்களில் கட்சி வேரூன்ற மம்தா பானர்ஜி விரும்பிய நிலையில், பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் கோவா மாநிலத்தில் கட்சி களமிறங்கியது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என ஆய்வுகளில் தெரியவந்ததால் ஐ-பேக் மீது கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுவதை மம்தா உணர்ந்துள்ளார்.
தனது ஆலோசனைகள் எடுபடாத நிலையில், திரிணாமுல் காங்கிரசின் உட்கட்சி விவகாரங்களில் I-PAC அமைப்பு தலையிடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், மம்தா பானர்ஜி – பிரசாந்த் கிஷோர் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. கட்சியில் ‘ஒரு தலைவர் ஒரு பதவி’ என்ற முழக்கத்தை மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட இளம்தலைவர்கள் எழுப்ப I-PAC ஆலோசனையே காரணம் என பல மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.
“ஒரு தலைவர் ஒரு பதவி” கொள்கைக்கு ஆதரவாக தனது ட்விட்டர் கணக்கில் அனுமதியின்றி பதிவிட்டதாக ஐ-பேக் மீது இணை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா குற்றம்சாட்டியது மம்தாவிடம் மேலும் அனலைக் கூட்டியது. அதனால், ஐ பேக்-கின் 5 ஆண்டு ஒப்பந்தத்தை மம்தா ரத்து செய்துள்ளதாக மூத்த தலைவர் மதன் மித்ரா தெரிவித்தார். மேலும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி நடப்பதாகக் கருதுவோரின் முக்கியத்துவத்தை குறைக்க, திரிணாமுல் கட்சியில் தன்னுடைய தலைவர் பதவி தவிர அனைத்துப் பதவிகளையும் ரத்து செய்தார் மம்தா. அதில் மருமகன் அபிஷேக் முகர்ஜியின் தேசிய பொதுச் செயலாளர் பதவியும் அடக்கம்.
கோவாவில் மட்டுமின்றி அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதும் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு ஆதரவாக கட்சியில் இளம் தலைவர்களை திரளச் செய்வதும் கூடுதல் அதிருப்தி ஏற்படுத்தியதால் ஐ-பேக் ஒப்பந்தத்தை மம்தா ரத்து செய்ததாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM