புதுடில்லி-நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., நிறுவனத்தில், 5 சதவீத பங்குகளை விற்பதற்கான புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, ‘செபி’ எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம், மத்திய அரசு வரைவு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை, பங்கு வெளியீடு மூலமாக திரட்டுவதற்கான நடவடிக்கைகள் நடந்து வந்தன. இதற்கு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது.இந்நிலையில், அரசின் 5 சதவீத பங்குகளை, அதாவது 31.6 கோடி பங்குகளை, பங்கு வெளியீட்டின் மூலம் விற்பது தொடர்பான வரைவு விண்ணப்பத்தை, செபி அமைப்பிடம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
இதை, மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலர் துஹின் காந்த பாண்டே, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.பங்கு விற்பனை மூலம் எவ்வளவு தொகை திரட்டப்பட உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.அதே நேரத்தில், இந்த பங்கு விற்பனை மூலம், 63 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement