மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.
இதற்கு வருடத்திற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே, சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மாநில அரசின் முடிவை எதிர்த்து பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன் என அறிவித்தார்.
இந்நிலையில், ஒயின் விற்பனைக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை அன்னா ஹசாரே இன்று வாபஸ் பெற்றார்.
அவரது சொந்த கிராமமான ராலேகான் சிந்தியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசிய அன்னா ஹசாரே, குடிமக்களின் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகளுக்காக அமைச்சரவையின் முடிவை இப்போது மாநில அரசு முன் வைக்க முடிவு செய்துள்ளது. அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அரசாங்கத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும் என கிராம மக்களிடம் கூறினேன்.
இதனால் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு