கேரளாவில் பாஜக சார்பில் முதல்முறையாக மாவட்ட குழு உறுப்பினராக திருநங்கை ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் அதிதி அச்சுத் (34). திருநங்கையான இவர் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் பயின்றுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் அங்கமான இந்திய மாணவர் கூட்டமைப்பின் உள்ளூர் தலைவராக பதவி வகித்துள்ளார். பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இப்போது, அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மாநிலத்திலேயே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அதிதி அச்சுத் கூறும்போது, “என்னுடைய நியமனத்தை முன்னுதாரணமாகக் கொண்டு பிற கட்சிகளும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். சமுதாயத்தில் புறக்கணிக்கப்படும் திருநங்கைகள், வசிப்பிடம், வாழ்வாதாரம் இன்றி அவதிப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைக்காகவும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் பாடுபடுவேன்” என்றார்.