சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பாரந்தூர், பண்ணூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு புதிய சாத்தியமான தளங்களை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்விக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியா, பசுமை விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான கிரீன்ஃபீல்ட் கொள்கையை இந்திய அரசு வகுத்துள்ளது. இதற்காக மாநில அரசு அல்லது விமான நிலைய ஆபரேட்டர் தளங்களைக் கண்டறிந்து, விமான நிலையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை செய்ய வேண்டும். அதன்பின், விண்ணப்பம் வழிகாட்டல் குழுவின் கொள்கை ரீதியிலான ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தின் திருசூலத்திலிருந்து திருப்போரூர் மிக அருகில் இருக்கும். பயண நேரம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக தான் இருக்கும்.
ஆனால், தற்போதைய விமான நிலையத்திலிருந்து பண்ணூர் மற்றும் படலம் ஆகிய இடங்களுக்குச் செல்ல கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகும். இதில், பரந்தூர் தான் வெகு தொலைவில் உள்ளது. அங்கு செல்ல திருசூலத்திலிருந்து இரண்டு மணி நேரமாகும்.
தொற்றுநோய்க்கு முன்னர், நகர விமான நிலையம் கடுமையான இடையூறுகளைச் சந்தித்தது. பயணிகளும் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். சாத்தியமான தளங்கள் பரிசீலிக்கப்பட்டும் எந்த முடிவும் எடுக்கப்படாததால் இரண்டாவது விமான நிலையத்திற்கான தளத்தையும் இறுதி செய்ய முடிவதில்லை.
தற்போது, இந்த புதிய தளங்களில் விமான நிலையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் குழுவை விரைவில் நியமிக்குமாறு மாநில அரசு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஆய்வில், புதிய விமான நிலையத்திற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் நிறுவ குறிப்பிட்ட தளத்தில் போதுமான இடம் உள்ளதா என்பதை அறியவும், தாம்பரம் விமானப்படை போக்குவரத்தில் எந்த குறுக்கீடும் இல்லை அல்லது வேறு ஏதேனும் தடைகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகிறது.
இதுதவிர, சென்னை விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு விரிவாக்கப் பணிகள் குறித்தும் அமைச்சர் விவரித்தார்.