தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாஜக மண்டல துணைத் தலைவரின் மண்டையை, திமுக பிரமுகர் உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்கு பதிவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சியின் 44வது வார்டுக்குட்பட்ட (சிட்டலபாக்கம்) பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, பாஜகவின் துணை மண்டல தலைவர் பழனி தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சிட்டலபாக்கம் கலைமகள் தெரு பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவர், மதுபோதையில் பாஜகவின் பழனியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக பிரமுகர் கார்த்திக் செங்கல் ஒன்றை எடுத்து, பாஜக பிரமுகர் பழனியின் மண்டையில் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவரின் தலையில் ஆறுதல்கள் போடப்பட்டு பின்னர், இதுகுறித்து சிட்டலபாக்கம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர் கார்த்திக் தாக்கியது குறித்து பழனி புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், கார்த்திக் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.