சாதாரண சைக்கிளை மின்சார வாகனமாக மாற்றும் வகையிலான பேட்டரி சாதனத்தை கண்டுபிடித்த நபருக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நபர் ஒருவர் தாம் கண்டுபிடித்த கருவியின் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார். மணிக்கு 26 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த பேட்டரி சைக்கிள் கரடுமுரடான பாதையிலும் சென்றும் வருவதோடு, சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடுகிறது. 20நிமிடம் சார்ஜ் செய்தாலே 50சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏறும்.
அதுமட்டுமில்லாமல் சைக்கிள் பெடலை மிதித்துக் கொண்டே இருந்தாலும் சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 40கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வரலாம். மேலும், அந்த சாதனம் தீப்பிடிக்காத வகையிலும், தண்ணீரில் விழுந்தாலும் பாதிக்கப்படாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.