ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக
மற்றுமொரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா
தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பிரேரணையை இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்ற
பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கான
பொறுப்புக் கூறலின் தாமத நிலை மற்றும் அண்மைய கால உரிமைகள் மீறல்கள் பற்றிய
விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனக் கொழும்பு இராஜதந்திர மட்டத் தகவல்கள்
குறிப்பிடுகின்றன.
பிரித்தானியா கொண்டுவரவுள்ள இந்தப் புதிய பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
பலவும் மேற்குலக நாடுகள் சிலவும் ஆதரவைத் தெரிவித்துள்ளன எனவும் அந்தத்
தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் ஜெனிவாவில் ஏற்படக் கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு
அரசு பல்வேறு
வியூகங்களை வகுத்து வருகின்றது.
இதனடிப்படையில் ஜெனிவா அமர்வுக்கு முன்னர் முக்கிய சில ஐரோப்பிய நாடுகளுடன்
கலந்துரையாடலை முன்னெடுக்க வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்
தீர்மானித்துள்ளார். இந்தக் கலந்துரையாடல்களுக்குச் சில நாடுகள் விருப்பம்
தெரிவித்துள்ளன என வெளி விவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
அண்மைய இந்திய விஜயத்தைப் போன்று குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெனிவா
அமர்வுக்கு முன்னர் விஜயம் செய்தல் அல்லது மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை
குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த நாடுகளின்
பிரதிநிதிகளைச் சந்தித்து ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ளல் போன்ற வழிமுறைகள்
குறித்து இலங்கையின் இராஜதந்திர பணிக் குழாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதேசமயம் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் எதிர்வரும் 28ஆம்
திகதி ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49 ஆவது
கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.
மார்ச் 3ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த எழுத்து
மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையானது இலங்கைக்குச் சவால்
மிக்கதாகவே அமையும் எனவும் கருதப்படுகின்றது.