கொல்கத்தா,
மேற்கு வங்கம் மாநிலம் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்த இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
மேதினிபூர் நகரில் உள்ள கஞ்சவதி ஆற்றின் கரையில் பகுதியில், ரெயில் பாலத்திற்கு அருகில் ஒரு சுற்றுலா இடம் உள்ளது. மிதுன் கான் (வயது 36), அப்துல் கெய்ன் (வயது 32), உள்ளிட்ட 3 இளைஞர்கள் இந்த பகுதிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர்.
மிதுன் மற்றும் அப்துல் இருவரும் தங்கள் நண்பருடன் தண்டவாளத்திற்கு மிக அருகில் நின்று கொண்டு செல்பி எடுத்துள்ளனர். செல்பி எடுத்துக்கொண்டிருக்கும்போது, மேதினிபூரில் இருந்து ஹவுரா செல்லும் உள்ளூர் ரெயில் அந்த வழித்தடத்தில் வந்துள்ளது. ரெயில் ஓட்டுநர் பலமுறை ஹாரன் அடித்தும் அவர்கள் மூவரும் அங்கிருந்து நகராமல் தொடர்ந்து செல்பி எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அருகில் வந்த ரெயில் அவர்கள் மீது மோதியதில், அவர்கள் தண்டவாளத்தில் இருந்து வெகு தொலைவில் விழுந்தனர். மூன்று பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து நடந்ததை அடுத்து ரெயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்தனர். முதல் கட்ட விசாரணைக்கு பின் ரெயில்வே முதுநிலை கோட்ட பொறியாளர் பிஸ்வஜித் பாலா, ‘ரெயில் பாதையின் இந்த பகுதியில் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பலர் ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். இதனாலேயே இந்த விபத்து நடந்துள்ளது’ என்று கூறினார்.