அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடை உட்பட நெருக்கடிகளுக்கு அஞ்சுவதில்லை என ரஷ்யா வெளிப்படையாக சவால் விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு பொருளாதார தடை விதிப்புக்கு காரணமாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்த நிலையில்,
தற்போது ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz வெளியிட்டுள்ள அறிக்கையில் அதையே குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை என குறிப்பிட்டுள்ள Olaf Scholz உடனடியாக பொருளாதார தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவெடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த நிலையில், ஸ்வீடனுக்கான ரஷ்ய தூதுவர் Viktor Tatarintsev உள்ளூர் பத்திரிகை ஒன்றில் அளித்த பேட்டியில், உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் மேற்கத்திய நாடுகள் முடிவெடுக்க முடியாது எனவும், ரஷ்யா எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது எனவும், பொருளாதார தடைகளுக்கு ரஷ்யா ஒருபோதும் அஞ்சுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா உட்பட டசின் கணக்கான நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற காலக்கெடு விதித்துள்ளது.
சுமார் 130,000 ரஷ்ய துருப்புகள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையிலேயே போர் தொடர்பில் உலக நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு ரஷ்யா அஞ்சுவதில்லை என Viktor Tatarintsev எச்சரித்துள்ளார்.
ரஷ்ய மக்களுக்கு இத்தாலி அல்லது சுவிஸ் பாலாடைக்கட்டிகள் கண்டிப்பாக தேவை என்ற நிலை இல்லை, அதே பக்குவத்தில் ரஷ்யாவில் பாலாடைக்கட்டிகள் தயாரிக்கின்றோம்.
அதனால் இறக்குமதி தொடர்பில் ரஷ்யாவுக்கு பாதிப்பில்லை. மட்டுமின்றி, நாங்கள் அதிக தன்னிறைவு பெற்றுள்ளோம், மேலும் எங்களது ஏற்றுமதியை அதிகரிக்கவும் செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளுக்கு ரஷ்யாவை போரில் தள்ள வேண்டும் என்ற திட்டமிருக்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர், உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்து வரும் அவர்கள் எப்படி ரஷ்யாவை போரிட வேண்டாம் என அறிவுரை கூற முடியும் எனவும் Viktor Tatarintsev கேள்வி எழுப்பியுள்ளார்.