பெரம்பலூர் மாவட்டம், நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் மலையப்ப நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்குக் குடித்துவிட்டு வந்ததாகவும், வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த மாணவிகளிடம் அருகில் அமர்ந்து கொண்டு உடையை மாற்றி வரச் சொல்லி யூடியூபில் பாடல்களைப் போட்டு ஆடச்சொல்லியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்து வகுப்பறையிலிருந்து வெளியேறிய மாணவிகள், இது பற்றிப் பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளிக்கு வந்து ஆசிரியர் சின்னதுரைக்கு தர்ம அடி கொடுத்ததோடு போலீஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின்கீழ் ஆசிரியர் சின்னதுரை மீது வழக்கு பதிந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். “ஆசிரியர் சின்னதுரை தினம்தோறும் பள்ளிக்குக் குடித்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருப்பதாகப் பள்ளி மாணவ, மாணவிகள் சொல்கிறார்கள். அதே போல் சம்பவத்தன்று குடித்துவிட்டு வகுப்புக்குச் சென்று, மாணவிகளின் அருகில் அமர்ந்துகொண்டு யாருக்கு டான்ஸ் ஆடத்தெரியும் என்று கேட்டிருக்கிறார்.
ஒருசில மாணவிகள் கையை தூக்கியிருக்கிறார்கள். அப்போது, `ஸ்கூல் யுனிஃபார்ம் டிரெஸ்’ல டான்ஸ் ஆடாதீங்க. கலர் டிரஸ் மாத்திக்கிட்டு வந்து டான்ஸ் ஆடுங்க. அது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று சொல்லிவிட்டு, யூடியூபில் பாட்டை போட்டு ஆடவைத்திருக்கிறார்.
அதன் பிறகு வகுப்பறையில் உள்ள ஜன்னல் கதவை மூடியதும் மாணவிகள் பயந்துகொண்டு வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். இதனால், பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். அந்த ஆசிரியரும் மது போதையில் பதிலுக்கு வாக்குவாதம் செய்ய, ஆத்திரமடைந்தவர்கள் அவரை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். பின்னர், எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் நாங்கள் சென்று அந்த நபரை கைது செய்தோம்” என்றனர்.
Also Read: திருவண்ணாமலை: தொடக்கப்பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமையாசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!