மும்பை:என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் முக்கிய பதவிக்கு அதிகாரியை நியமித்ததில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், முறைகேட்டில் ஈடுபட்டதற்காக, தேசிய பங்கு சந்தை மற்றும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகள் இருவருக்கு, ‘செபி’ எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு அபராதம் விதித்துள்ளது.
விதிமுறைகள் மீறல்
என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ரவி நரேன் என்பவர் 1994 – 2013 வரை பதவி வகித்தார். இவருக்கு பின் சித்ரா ராமகிருஷ்ணா என்பவர் 2013 – 2016 வரை இப்பதவியில் இருந்தார்.இந்த காலகட்டத்தில் தேசிய பங்கு சந்தையின் குழு இயக்க அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற மிக முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாகவும், கட்டுப்பாடுகளை மீறி அவருக்கு அதிக சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து, செபி எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தியது. இதில், விதிமுறைகள் மீறப்பட்டது உறுதியானது. தேசிய பங்கு சந்தையில் வேறு எந்த மூத்த அதிகாரிக்கும் வழங்கப்படாத அளவு, ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் சம்பளம், ஆனந்த் சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர் பணியில் சேர்ந்த ஒரே ஆண்டில் மூன்று முறை அவருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.
உத்தரவு
இதையடுத்து, தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாயும், ரவி நரேன், ஆனந்த் சுப்ரமணியன், தேசிய பங்கு சந்தைக்கு தலா 2 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செபி உத்தரவிட்டு உள்ளது.மேலும் இந்த முறைகேடு நடந்த காலகட்டத்தில் தேசிய பங்கு சந்தையின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரியாக பதவி வகித்த வி.ஆர்.நரசிம்மன் என்பவருக்கு 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த அனைவ ருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சாமியாரிடம் ஆலோசனை?தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்த காலத்தில், முக்கியமான அலுவல் முடிவுகளை இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் ஆலோசனை பெற்றே எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த சாமியாரை அவர் சந்தித்திராத நிலையில், சாமியாரின் ‘இ – மெயில்’ முகவரி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.ஆனந்த் சுப்ரமணியனின் பணி நியமனம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் சாமியாரின் ஆலோசனைபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement