தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் கட்சியில் திமுகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, திமுக நிர்வாகிகள் சிலர், தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் தங்களைத் திட்டுவதாகக் கூறியதற்கு, சீட் கிடைக்காதவர்கள் திட்டத்தான் செய்வார்கள். மானம், மரியாதை, சுயமரியாதை இழந்துவிட்டவர்கள்தான் கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும் என்று கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் டி.ஆர். பாலு பிரச்சாரம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “சீட்டு கிடைக்காதவர்கள் எல்லாம் என்னைத் திட்டுக்கிறார்கள் என்றால் திட்டத்தான் செய்வார்கள். என்ன எப்போதுமே மாலை போட்டுக்கொண்டிருப்பார்களா? கல்லால் அடிக்காமல் இருக்கிற வரைக்கும் காயப்படாமல் இருக்கிற வரைக்கும் சந்தோஷப்படுங்கள். இது மாதிரி நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது நான் எவ்வளவு அடிப்பட்டிருப்பேன். எவ்வளவு உதைப்பட்டிருப்பேன். மானம், ஈனம், சுயமரியாதை எல்லாம் இழந்துவிட்டவர்கள்தான் கட்சியில் நிர்வாகியாக இருக்க முடியும்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”