மும்பை: கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் முகக் கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவிய போது முதல் மாநிலமாக மகாராஷ்டிராதான் அதிகம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே நேற்று மும்பையில் கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்து வருகிறது. மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தினசரி கரோனா பாதிப்பு 1 சதவீதமாக குறைந்துவிட்டது. இங்கிலாந்து போன்ற உலகின் பல நாடுகள் முகக் கவசம் அணியாமல் இருக்க மக்களுக்கு அனுமதி அளித்துள்ளன. இது எப்படி சாத்தியம் என்று தகவல் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளின் கரோனா தடுப்பு நடவடிக்கை குழுவை கேட்டுக் கொண்டுள்ளோம்.
மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்கிறது. இதுதொடர்பாக சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத் தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து நிபுணர்களின் கருத்தைக் கேட்டுள்ளோம். எனினும், மகாரா ஷ்டிராவில் மக்கள் தொகை அதிகம். சிறிது காலத்துக்கு முகக் கவசம் அணியும் நிலை தொடரும்.
இவ்வாறு ராஜேஷ் தோபே தெரிவித்தார்.
– பிடிஐ