கைவ்,
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான ராணுவ படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ரஷ்யாவின் தலைநகர் கைவ் பகுதியில் இந்த பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போர் எதற்கும் தீர்வாகாது என்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்ப்போம் என்றும் பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் ஈடுபட்டவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.