புவி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி 52 ராக்கெட் நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இருபத்தி ஐந்தரை மணி நேர கவுண்ட்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.
புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 என்ற அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான இருபத்தி ஐந்தரை மணி நேர கவுண்ட்டவுன் அதிகாலை 4.29 மணிக்கு துவங்கியது. ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இஒஎஸ்-04 செயற்கைக்கோள் 1,710 கிலோ எடையுடையது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இது
புவியில் இருந்து 529 கி.மீ. உயரம் கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த ரேடார் செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்குப் பயன்படும். மேலும், விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவிபுரியும். அனைத்துத் பருவ நிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது.
இதனுடன் ஆய்வுத் திட்டத்தின்கீழ் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் ஏவப்பட உள்ளன. இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு மாணவர்கள் வடிவமைத்த சிறிய ரக இன்ஸ்பயர் சாட் -1 செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படுகிறது.
மேலும், இந்தியா, பூட்டான் நாடுகள் ஒருங்கிணைந்து வடிவமைத்துள்ள ஐ.என்.எஸ் – 2TD என்ற சிறிய ரக செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 2022 ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்த பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்த இருக்கிறது. தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை ஏவுவதற்காக இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.