குஜராத் மற்றும் சூரத்தில் கப்பல் கட்டுமான தளங்களைக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஏ.பி.ஜி. கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மீது சில வங்கிகள் கடன் மோசடி புகார்களை அளித்தன. அந்தப் புகார்கள் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இதுவரை 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி அளவுக்கு ஏ.பி.ஜி ஷிப்யார்டு மற்றும் அதன் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி மற்றும் அஷ்வினி குமார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுவரை நடந்த வங்கி மோசடிகளில் இது மிகப்பெரியது என்றும், வங்கிகள் எந்த நோக்கத்திற்காகக் கடன் வழங்கியதோ அதைத் தவிர பல வகைகளில் வழங்கப்பட்ட நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிறுவனம் கடன் வாங்கியதாகக் கூறப்படும் வங்கிகளின் விவரங்களுடன் வாங்கிய தொகையையும் சி.பி.ஐ வெளியிட்டிருக்கிறது.
அதில், பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.2,925 கோடியும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ரூ.7,089 கோடியும், ஐ.டி.பி.ஐ வங்கியில் ரூ.3,634 கோடியும், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ.1,614 கோடியும், பி.என்.பில் ரூ.1,244 மற்றும் ஐ.ஓ.பி-ல் 1,228 கோடியும் ஏ.பி.ஜி ஷிப்யார்டு நிறுவனம் கடன் வாங்கியுள்ளதாகத் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சி.பி.ஐ கடந்த 7-ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.