மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் விற்பனை செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில திறன் வளர்ச்சி துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மஹாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, முடிவை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட் மூலம் மது விற்கும் மஹாராஷ்டிர அரசின் முடிவுக்கு எதிராக பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அன்னா ஹசாரே அறிவித்தார்.
இந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‛ எனக்கு அரசு செயலர்களிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அவர், ஒயின் தொடர்பான கொள்கையை நிறைவேற்றும் முன், மக்களின் முடிவு குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் எனது போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது’ என்றார்.
Advertisement