40 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட கோவாவுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணிக்கு தேர்தல் நிறைவடைய உள்ளது.
ஒட்டுமொத்தமாக தேர்தல் களத்தில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் மாநிலத்தை ஆளும் பாஜக தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மேலும், அதன் கூட்டணிக் கட்சியான கோவா முன்னேற்ற கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக கோவா தேர்தலில் களமிறங்கியுள்ளது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் திரிணமுல் 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கோவா தேர்தலில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அலெய்ஸோ ரெஜினால்டோ லூரென்கா, முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர், முன்னாள் முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர், மாநில துணை முதல்வர் சந்திரகாந்த் கவ்லேகரின் மனைவி சாவித்திரி கல்லேகர் ஆகியோர் சுயேச்சையாக போட்டியிடுவது தேர்தல் சுவாரசியத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
அதேபோல், கோவா மாநிலத்தில் பாஜகவின் முகமாக பார்க்கப்பட்ட மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மி இந்த முறை நிச்சயம் சில இடங்களில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப்பைப் போலவே இங்கும் `டெல்லி மாடல்’ என்பதை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறது ஆம் ஆத்மி. ஆளும் பாஜக மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை கையிலெடுத்து, `கோவாவை, ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்; வேலைவாய்ப்புகளை அதிகரிப்போம்’ என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்திருப்பது கோவா இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM