புதுடெல்லி: ஆப் லாக், ப்யூட்டி கேமரா, விவா வீடியோ எடிட்டர் உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா 59 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை விதித்தது. அவற்றில் டிக்டாக், வீசேட், ஹெலோ உள்ளிட்ட இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான செயலிகள் இருந்தன. நாட்டின் இறையான்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்த செயலிகளுக்கு தடை விதித்ததாக அரசு தெரிவித்தது.
இந்தியா – சீனா எல்லையில் கடந்த 2020 தொடக்கத்தில் இருந்தே பதற்றம் அதிகரித்துள்ளது. அப்போது தொடங்கி இதுவரை கிட்டத்தட்ட 300 சீன மொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்திருக்கிறது.
கடந்த 2020 ஜூன் 15ல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொள்ளப்பட்ட பின்னர் முதல் சுற்று சீன செயலிகளுக்கான தடை நடைபெற்று வருகிறது.
தற்போது, ஸ்வீட் செல்ஃபி, ப்யூட்டி கேமரா, செல்ஃபி கேமரா, விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் ஸ்ரைவர், ஆன்மையோஜி அரேனா, ஆப்லாக், டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகள் சில புதிய பெயர்களுடன் மீண்டும் இந்தியாவில் புழக்கத்தில் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.