ஜகார்த்தா,
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஜெம்பர் மாவட்டத்தில் பயங்கன் என்கிற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடந்து.
இதையொட்டி 20-க்கும் அதிகமானோர் கடற்கரையில் திரண்டு சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்ச அலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்து சென்றது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.
எனினும் அதற்குள் 12 பேர் தாமாக நீந்தி கரை சேர்ந்தனர். மாயமான 11 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். எனினும் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் அவர்கள் 11 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சியின் போது ராட்சத அலையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது இந்தோனேசியாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.