ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பலரும் கண்டித்துள்ளனர்.
இதனை வன்மையாக கண்டிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அமைச்சர், பொலிஸ்மா அதிபரைக் கேட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் வெட்கப்பட வேண்டிய கடுமையான சம்பவமாகும் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் விரிவாக விசாரித்து இந்தத் தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது பற்றி நாட்டிற்குத் தெளிவுபடுத்த வேண்டுமென அந்த இயக்கம் கேட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை தொழில்வாண்மை ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாக அமைச்சர் விமல் வீரவன்சவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனநாயகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இதனைப் பார்க்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை விரைவில் மேற்கொள்ளுமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.
விசாரணை பல கோணங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.