புதுடில்லி: துருக்கி ஏர்லைன்ஸ் தலைவராக பணியாற்றிய இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் (சி.இ.ஓ), நிர்வாக இயக்குநராகவும் (எம்.டி) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு அக்டோபரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு மத்திய அரசு ஏலம் விடப்பட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து ‘ஏர் – இந்தியா’ விமான நிறுவனத்தை, ‘டாடா’ குழுமத்திடம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.
இந்நிலையில், ஏர் இந்தியாவின் புதிய சி.இ.ஓ.,வாகவும், நிர்வாக இயக்குநராகவும் இல்கர் அய்சி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டாடா சன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ‛ஏர் இந்தியா நிறுனத்தின் கூட்டம் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்தில் இல்கர் அய்சியை ஏர் இந்தியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவர், முன்னதாக துருக்கி ஏர்லைன்ஸின் தலைவராக பணியாற்றினார்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement