சிரியா: பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி, அமெரிக்க படைகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது இறந்துவிட்டார் என்று நேற்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஐஎஸ்ஐஎஸ் முன்னாள் தலைவர் அல் பாக்தாதி இறந்தபின்பு புதிய தலைவராக அல் குரேஷி பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து அவரை அமெரிக்க கொல்லத் திட்டமிட்டுவந்தது. இந்தநிலையில்தான் மத்திய கிழக்கு நாடான சிரியாவின் அத்மே நகரில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் குடும்பத்துடன் வசித்துவந்த அவரை நேற்றுமுன்தினம் அமெரிக்க படைகள் நெருங்கியது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஆப்ரேஷனில் என்ன நடந்தது? – நீண்ட நாட்களாக, அல் குரேஷியை பிடிக்கும் திட்டம் இருந்தாலும், டிசம்பர் இறுதியில்தான் அது இறுதிவடிவம் பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில்தான் அல் குரேஷி சிரியாவின் அத்மே நகரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் இருப்பதை அமெரிக்கப் படைகள் உறுதிசெய்துள்ளது. மூன்றுமாடி கொண்ட அந்த வீட்டில் மூன்றாவது மாடியில் அல் குரேஷி வசித்துள்ளார். அதுவும் அரிதாகவே அந்த மூன்றாவது மாடியில் இருந்து வெளியே வரும் அவர், பெரும்பாலும் தனக்கு வரும் கூரியர்களை வாங்குவதற்காகவே அந்த மாடியைவிட்டு வெளியேவந்துள்ளார் என்கிறது பென்டகம்.
இந்த விவரங்களை உறுதிசெய்த பின்னரே, குரேஷியை உயிருடன் பிடிக்கும் பிளானை வகுத்து டிசம்பர் 20-ம் தேதி அதற்கு ஜோ பைடனிடம் ஒப்புதல் வாங்கியுள்ளனர். ஏவுகணைத் தாக்குதல் நடத்தி, குரேஷியை கொல்வதுதான் அமெரிக்காவின் முதல் பிளானாக இருந்துள்ளது. ஆனால், அவர் வசித்துவந்த அத்மே நகர் குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் உயிருடன் பிடிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர். சரியான நேரம் வரும்வரை தங்கள் காத்திருப்பை மேற்கொண்ட அமெரிக்கப்படை, சரியான திட்டமிடல்கள் மேற்கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இதற்காக பைடன் அமைத்த குழு இறுதி ஒப்புதலை தரவே, நேற்றுமுன்தினம் அவரை தூக்குவதற்கான பிளானுடன் அத்மே நகருக்குள் ஹெலிகாப்டரில் நுழைந்துள்ளது. தாக்குதல்களின் ஒவ்வொரு அசைவுகளையும் ஜோ பைடன் தனது சகாக்களுடன் வெள்ளை மாளிகையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து வந்துள்ளார். ஜெனரல் ஃபிராங்க் மெக்கென்சி, பைடனுக்கு தாக்குதல் சம்பவத்தின் அப்டேட்டுகளை வழங்கி வந்துள்ளார்.
குரேஷி வசித்த குடியிருப்பை நெருங்கியதும் அமெரிக்கப் படை அங்கிருந்த பொதுமக்களை கையை உயர்த்தச் சொல்லியதோடு, அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அங்கிருந்து வெளியேறிய ஒரு பெண், ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் குடியிருப்பின் இரண்டாவது தளத்தை நோக்கிச் சென்றபோது குரேஷியின் பாதுகாவலர் ஒருவரும், அவரின் இரண்டு மனைவிகளில் ஒருவரும் அமெரிக்கப் படையை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதற்கு பதில் தாக்குதல் நடத்தியதில் இருவரும் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இறுதியில், அமெரிக்கப் படை தன்னை சுற்றிவளைத்ததை அறிந்து குரேஷி சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த வெடிகுண்டு வெடித்ததில் மூன்றாவது மாடியில் இருந்த, அவரின் மனைவி ஒருவர், ஒரு குழந்தை உள்ளிட்ட அனைவரும் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அமெரிக்கப் படையின் இந்த ஆபரேஷனில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13. என்றாலும், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும்தான் இதில் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்தப் பகுதியினர், ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக பேசிய அமெரிக்கப் படையின் ஜெனரல், “குரேஷி எந்தவித சண்டையும் போடவில்லை. மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்து தன் குடும்பத்துடன் இறந்துள்ளார். இத்தனைக்கும் நாங்கள் அவரை சரண்டராகி மன்னிப்புப் பெற்று புது வாழ்க்கை பெறலாம் என்று அறிவித்தோம். அவர் கேட்கவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அந்த மனிதவெடிகுண்டு வெடிப்பு இருந்தது. முடிந்த அளவு முதல் இரண்டு மாடிகளில் இருந்தவர்களை நாங்கள் வெளியேற்றிவிட்டோம். ஆனால் மூன்றாவது மாடியில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவரை சுற்றிவளைக்க கடந்த சில நாட்களாகவே அமெரிக்கப் படைகள் ஹெலிகாப்டர் சோதனையை மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்த்துள்ளன. என்றாலும் இறுதி ஆபரேஷனுக்காக சென்ற ஹெலிகாப்டரில் ஒன்று இயந்திர கோளாறு ஏற்பட்டு தடைபட, அதனை விட்டுச் செல்ல முடியாமலே அமெரிக்கப் படையே அந்த ஹெலிகாப்டரை குண்டுவீசி அழித்துள்ளது. குரேஷியின் மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்தது குறித்து ஜோ பைடன் பேசுகையில், “நம்பிக்கையற்ற கோழைத்தனத்தின் இறுதி செயல்” என்று வசைபாடினார்.