கரோனாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சினிமா. கோடிகளைக் கொட்டிகோடிகளை அள்ளும் கனவுக் கோட்டை, கரோனாவால் குற்றுயிரும் குலைஉயிருமானது யாரும் எதிர்பார்க்காதது. கரோனாவுக்கு பிறகு சினிமா, சினிமா வியாபாரம் எப்படி இருக்கிறது? தயாரிப்பாளர் கே.ராஜனிடம் கேட்டோம்.
கரோனா பாதிப்பில் இருந்து தமிழ் சினிமாஇன்னும் மீளவே இல்லை. பொங்கலுக்கு 18 படங்கள் வரை ரிலீஸ் ஆச்சு. எந்த படத்துக்கும் 20 பேர் கூட வரலை. ஆனா, ‘மாநாடு’ வசூல் மகிழ்ச்சி அளித்துள்ளது.
’மாநாடு’ தயாரிப்பாளர்கூட, விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கலைன்னு சொல்லியிருக்காரே?
ஒரு படத்தோட மொத்த கலெக்ஷன் என்னன்னு தயாரிப்பாளர்கிட்ட காட்டணும்.அதுதான் சரி. ‘மாநாடு’ படத்தைப் பொருத்தவரை, 13 கோடிக்கு அதிகமா வசூலானா 10 சதவீதம் தயாரிப்பாளருக்கு வரணும். அந்த கணக்கு வரலைங்கற கோபத்துல, சுரேஷ் காமாட்சி அப்படி ட்வீட் பண்ணியிருக்கார்.
தியேட்டர்காரர்கள் ஒழுங்கா பணம் தர்றதில்லைன்னு சொல்லியிருக்கீங்களே?
60 சதவீத தியேட்டர் உரிமையாளர்கள்தான் நியாயமா நடந்துக்கிறாங்க. முதல் 7 நாள் படம் ஓடி முடிஞ்சதுமே, 8-வது நாள் கணக்கு பார்த்துக் கொடுக்கிறவங்க 20 சதவீதம் பேர்தான். ரெண்டு வாரம், மூணு வாரத்துல தர்றவங்க 30, 40 சதவீதம்பேர். மத்தவங்க மூணு மாசம் ஆனாலும்தரமாட்டேங்கிறாங்க. தயாரிப்பாளர்கள் போராடி ரிலீஸ் பண்ணின படத்துக்கானகாசை, தியேட்டர்காரங்க கொடுப்பது இல்லைங்கறது பெரிய வேதனை. சில தியேட்டர்காரங்க அப்படி இருக்காங்க.
ஓடிடி-க்கு எதிர்ப்பு தெரிவிச்சீங்க.. இப்ப அதோட வளர்ச்சி வேகமாக இருக்குதே!
நேரடியா ஓடிடி-யில கொடுக்கும்போது சினிமாவை நம்பியே இருக்கிற பல பேர் பிழைப்பு போகுது. அதனால, தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி 3-வது வாரத்துக்குப் பிறகுஓடிடி-க்கு கொடுங்கன்னுதான் சொல்றோம்.
ஓடிடி-யால் திரையரங்குக்கு பாதிப்பில்லை : அபிராமி ராமநாதன்
திரையரங்குகளின் நிலைமை பற்றி சென்னை அபிராமி மெகாமால் உரிமையாளரும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதனிடம் விசாரித்தோம்.
‘இப்போவரை சொல்லும்படியா இல்லை. நிலைமை சகஜமாகிட்டு வருது. ஏப்.14-ம் தேதிக்குள்ள எல்லாம் சரியாகும்னு நம்பறேன்.
ஓடிடியால் தியேட்டரில் கூட்டம் குறையுதா?
கண்டிப்பா இல்லை. திரையரங்குகள்ல வந்து படம் பார்க்கிற அனுபவமே வேற. அதை ஓடிடி-யால கொடுக்க முடியாது. ரஜினி, அஜித், விஜய், சூர்யா மாதிரி பெரியநடிகர்கள் படம் வந்ததுன்னா, மக்கள் திரையரங்கைத் தேடி வர ஆரம்பிச்சிடுவாங்க. திரையரங்கு போறதுங்கறதே பிக்னிக் மாதிரிதானே.
நான் தியேட்டர் ஆரம்பிச்ச 1976-77-கள்லஎல்லோரும் பிரமாதமா டிரெஸ் பண்ணி, நிறைய நகை அணிஞ்சு ஒரு ஃபங்ஷனுக்கு போற மாதிரி வருவாங்க. அந்த மூட் இப்பவும் மக்கள்ட்ட இருக்கு. அதனால இந்த நிலை கண்டிப்பா மாறும்.
மக்கள் மீண்டும் வரத் தொடங்கறதுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் உதவும். முதல்ல மக்கள் வர ஆரம்பிச்சுட்டாங்கன்னா, பிறகு எல்லா படங்களுக்கும் வர ஆரம்பிச்சுடுவாங்க. கண்டிப்பா ஏப்.14-ம்தேதிக்கு பிறகு மக்கள் வருவாங்கன்னு நம்பறேன்.
சில திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு உடனேபணம் கொடுப்பதில்லையாமே?
எனக்குத் தெரிஞ்சவரை, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் சரியா கொடுத்துட்டு வர்றாங்க. ஒருசிலர் அப்படி இருக்கலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கும். எனக்கு தெரிஞ்சவரைக்கும் கொடுக்காம இருக்க முடியாது. ஏன்னா, ஒரு விநியோகஸ்தருக்கு நான் பணமே கொடுக்கலைன்னா, அவர் அடுத்த படத்தை எப்படி எனக்கு கொடுப்பார்? நாங்க விநியோகஸ்தரை நம்பி இருக்கோம். ஒரு தடவை தப்பு பண்ணினா, பெயர் கெட்டுப்போயிடும். வேற யாரும் படமே தர மாட்டாங்களே…? அதனால அதுக்கு வாய்ப்பு இல்லைன்னுதான் நினைக்கிறேன்