பெங்களூரு: ஹிஜாப் சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகாவில் 5 நாட்களுக்கு பிறகு உயர்நிலை பள்ளிகள் இன்றுமுதல் திறக்கப்பட்டன. பள்ளி வளாகம் வரை ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பின்னர் அதை அகற்றிய பிறகு வகுப்புகளில் பங்கேற்றனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகத்தில் இன்று முதல் உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.பள்ளி வளாகம் வரை ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் வகுப்பறைக்கு செல்லும் முன்னர் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வகுப்புகளில் பங்கேற்றனர். மாண்டியாவில் உள்ள உயர்நிலை பள்ளியில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஹிஜாப் இல்லாமல் பள்ளிக்கு வரவேண்டும் என ஆசிரியர்கள் பெற்றோரிடம் கண்டிப்புடன் தெரிவித்தனர். பள்ளிக்குள் நுழைந்து வகுப்புகளுக்கு செல்லும்போது ஹிஜாப்பை அகற்றிக்கொள்ளட்டும் என பெற்றோர்கள் தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.கர்நாடகாவில் ஹிஜாப் அணிய அனுமதி உள்ள உருது கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வகுப்புகளில் கலந்து கொண்டனர். அசம்பாவிதத்தை தடுக்க கர்நாடக முழுவதும் பள்ளி வளாகம் அருகே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.