கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் கைது செய்த அதிமுகவினரை விடுதலை செய்யக் கோரி காவல் நிலையம் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 90-வது வார்டு கோவைப்புதூர் பெருமாள் கோயில் வீதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பரிசுப் பொருட்களை எடுத்துச் செல்வதாக தகவல்கள் பரவின. இதையடுத்து 90-வது வார்டு பகுதியில் நேற்றிரவு அதிமுகவினர் போராட்டம் ஈடுபட்டதுடன், அங்கு வந்த திமுகவினரின் காரை சிறைபிடித்து, பறக்கும்படைக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு 2.30 மணிக்கு துணை ஆணையர்கள் ஜெயச்சந்திரன், உமா தலைமையில் போலீஸார் அங்கு வந்தனர்.
காரை சோதனையிட அதிமுகவினர் வலியுறுத்தி நிலையில், போலீஸார் சிறைபிடிக்கப்பட்ட திமுகவினரின் வாகனத்தை விடுவிட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். இதையறிந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், அருண்குமார், ஜெயராம் ஆகியோர் தலைமையிலான அதிமுகவினர் ராமநாதபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அதிமுகவினர் காவல் நிலைய முற்றுகையை தற்காலிகமாக கைவிட்டனர். முன்னதாக, போராட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுகையில், ”கோவையை கலவர பூமியாக்க திமுகவினர் முயற்சிக்கின்றனர். ரவுடிகளை இறக்கி அதிமுகவினரையும், மக்களையும் தாக்குகின்றனர்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, குனியமுத்தூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தங்கியிருந்த வீட்டின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி உடைத்துள்ளனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியும் உடைந்ததாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.