ஒட்டாவா: கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டம் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்களை ஒரு வாரம் தனிமைப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள லாரி ஓட்டுநர்கள், தலைநகர் ஒட்டாவாவுக்குள் லாரிகளுடன் நுழைந்து போராடப்போவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றுவிட்டார். ரகசிய இடத்திலிருந்து அரசின் வேலைகளை அவர் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், ஒரு வாரத்துக்கும் மேலாக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் லாரி ஓட்டுநர்கள் ஈடுவதால் பலரும் அவதிக்குள்ளாகி இருப்பதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
PEAK CANADA: Truckers have gathered in the blockaded streets of downtown Ottawa to play a game of hockey! How evil! pic.twitter.com/UhLttRtNoW
— Keean Bexte (@TheRealKeean) February 1, 2022
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மிச்செல்லா என்பவர் கூறும்போது, “இந்த வைரஸைக் கையாள்வதற்கு கனடாவும் மற்ற உலக நாடுகளும் வேறு வழிகளைக் கண்டறிய வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்தார்.
போராட்டம் குறித்து கனடா துணை பிரதமர் கிறிஸ்டியா ஃபிரிலேண்ட் கூறும்போது, “கனடாவில் உள்ள இளைஞர்களை போல எனது குழந்தைகளும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. நாம் எதிர்பார்க்கும் கனடா இதுவல்ல” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.