புதுடெல்லி: நெல், கரும்புக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்தக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திருச்சியிலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் ரயில் மூலம் நேற்று காலை புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். ரயில் நிலையத்திலேயே அவர்கள் ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி போலீசார் தமிழக விவசாயிகள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். ‘ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. அதனால் அனைவரும் திரும்பி செல்லுங்கள்’ என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் போலீசாரின் அறிவுரையை ஏற்க மறுத்து விவசாயிகள் ரயில் நிலையத்திலே அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பஞ்சாப் விவசாயிகளை போல காலவரையறையின்றி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து தமிழக விவசாயிகள் அனைவரையும் பேருந்தில் ஏற்றிய டெல்லி போலீசார் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து சண்டிகர்-மதுரை ரயிலில் ஏற்றி மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில், ‘‘டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் கொரோனா பிரச்சனையின் காரணமாக பாதுகாப்பை அடிப்படையாக் கொண்டு டெல்லியில் பல இடங்கள் 144 தடை உத்தரவு நிலுவையில் உள்ளது. அதனால் எங்களது போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இருப்பினும் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி போராட்டத்திற்கு அனுமதி பெற்றுக்கொண்டு மீண்டும் டெல்லி வந்து எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.