தஞ்சாவூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா கட்டிடத்திற்குள் குத்தகை விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டன.
10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழமையான இந்த கட்டிடம் கலை, கலாச்சாரம், நாடகம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக கட்டப்பட்டது. இந்நிலையில் இதனை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த ஆர்.கே.ஆர்.பிரதர்ஸ், அதற்குள் விதிகளை மீறி மதுபான பார், செல்போன் விற்பனை கடை, உணவகம், பேக்கரி உள்ளிட்டவற்றை கட்டிவிட்டு, உள்வாடகைக்கு விட்டு அதிக லாபம் ஈட்டி வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அந்த கடைகளை பூட்டி சீல் வைத்த நிலையில், இது தொடர்பான வழக்கில் கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி. ரவளிப்ரியா முன்னிலையில் கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.