தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சை மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, யாரேனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அதில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மாணவியின் தந்தை தரப்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கினை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருவதால் சிபிஐக்கு மாற்றவேண்டிய அவசியமில்லை என்றும், பள்ளி மாணவி விவகாரம் வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாகவும், தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவுக்கு மாணவியின் தந்தை 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் மாணவி வழக்கை தற்போது சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் ஆணைக்கு தடையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM