சென்னை: ‘தமிழகம் வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்க்க வேண்டியது அவசியம்’ என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) முன்னாள் தலைவர் சுகதியோ தோரட் வலியுறுத்தியுள்ளார். நுழைவுத் தேர்வுகளின் தாக்கம் குறித்து சமூக பொருளாதார சமுத்துவத்துக்கான கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இணையவழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசும்போது, “மருத்துவக் கல்விக்கான நீட் (National Eligibility-cum Entrance Test NEET) நுழைவுத் தேர்வை தமிழகம் வழியில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மருத்துவக் கல்விக்குக் கொண்டுவந்ததுபோல் மத்திய அரசு விரைவில் அனைத்துக் கல்விக்கும் நுழைவுத் தேர்வுகளைக் கொண்டுவந்துவிடும். தேசிய கல்விக் கொள்கையும் அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு என்பதையே பரிந்துரைக்கிறது. அப்படி ஒரு நிலை வந்தால், பணம் உள்ளவர்கள், நேரம் உள்ளவர்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் பயிற்சி மையங்களில் இணைந்து கல்வி கற்பது சாத்தியமாகும்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நீட் கொண்டுவரப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையும் அந்த அடிப்படையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் வெளியிட்ட தேசிய உயர் கல்வி தகுதிக்கான வரைவு வழிகாட்டுதல்களும் இதனை நோக்கியே உள்ளன.
விவரமறிந்தவர்கள் நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு பெறப்படும், தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று வாக்குறுதி கொடுத்தது. மக்கள் திமுகவை வெற்றி பெறவைத்தனர். எனவே, நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்பது மக்களின் எண்ணமாகவே இருக்கிறது” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளரும் சமூக ஆர்வலருமான சாணக்கியா ஷா, ’உயர் கல்விகளுக்கான நுழைவுத் தேர்வு, சமூக அந்தஸ்து, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு எப்படி எந்தெந்த வகையில் எல்லாம் கேடாக இருக்கிறது’ என்று விரிவாகப் பட்டியலிட்டார்.