திருப்பதி: திருப்பதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், 2 தடுப்பூசிகள் சான்றிதழுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனம் மூலம் தரிசிக்க நாளை செவ்வாய்க்கிழமை, காலை 9 மணி முதல் திருப்பதியில் 3 இடங்களில் தினமும் 15,000 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.
கரோனா தொற்று பரவும் அபாயம் இருந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலசவ தரிசன டோக்கன்கள் நேரடியாக வழங்குவது நிறுத்தப்பட்டது. ரூ.300 மற்றும் தர்ம தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் மட்டுமே திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் வழங்கியது. ஆனால், இந்த ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் சில கிராம புற பக்தர்கள் அவதி பட்டனர். இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் கரோனா தொற்று குறைந்தால் மீண்டும் சர்வ தரிசன டோக்கன்கள் நேரடியாக திருப்பதியில் விநியோகம் செய்யப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி, தற்போது கரோனா 3-ம் அலை குறைந்ததால், நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் விடுதி, கோவிந்தராஜர் சத்திரம் மற்றும் அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இதற்காக தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தினமும் 15,000 இலவச தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆதார் அட்டை கொண்டு வரும் பக்தர்கள் அனைவரும் இந்த டோக்கன்களை பெறலாம். டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு மறுநாள் சுவாமி தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் கரோனா தொற்றுக்கு 2 தடுப்பூசிகள் போடப்பட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பக்தர்கள், மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆர்டிபிசிஆர் எனும் கரோனா இல்லை என்பதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழை கொண்டு வருவது கட்டாயம். இது தரிசனத்திற்கு செல்வதற்கு 48 மணி நேரம் முன் எடுத்ததாக இருத்தல் அவசியம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்றவை கட்டாயம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.